அபார்ட்மெண்ட் அபத்தங்கள் - 1 - “முத்தையா”
அபார்ட்மெண்ட் செக்யூரிட்டிகளில் தமிழ் தெரிந்த ஒரே ஆள் முத்தையா தான்.சேலத்துக்காரர்.கொரியர் ஏதேனும் வந்திருக்கா, EB பில் வந்திருக்கா என அத்தனை விசாரிப்புக்களும் முத்தையாவிடம் தான்.ஹிந்தி மட்டுமே தெரிந்த மற்ற செக்யூரிட்டிகளிடம் இதை எல்லாம் கேட்டு பதில் பெறுவதற்குள் நாக்கு தள்ளிவிடும்.
தினமும் இரவு வந்து அன்றைய நாளிதழை வாங்கி செல்வார்."காலையிலியே வந்து வாங்கிக்கோங்க" என்றால்,"இருக்கட்டும் சார்,காலையில ஆபீஸ் போற அவசரத்தில் பேப்பர் வாசிக்க உங்களுக்கு நேரம் இருக்காது.சாயந்திரம் வந்து படிப்பீங்க. நான் காலையிலே பேப்பர் படிச்சு என்ன கலெக்டர் ஆகாவா போரேன்" என்று சிரித்து கொண்டே சென்று விடுவார்.
முத்தையாவிற்கு அறுபத்தி ஐந்து வயது இருக்கும்.ஊரில் மூன்று ஏக்கர் நிலம் வைத்து விவசாயம் செய்து வந்திருக்கிறார்.ஆடி காத்தில் அம்மியே பறக்கும்போது ,அருகம்புல் என்ன செய்யும்.விவசாயத்தில் பெரும் நஷ்டம்.கிடைத்த விலைக்கு நிலத்தை விற்று விட்டு ,பெங்களுருவில் இருக்கும் மகன் வீட்டிற்கு வந்து விட்டார்.ஒரு ஹால் ,அதில் பாதியை மறைத்து சமையல் அறை என்று ஒண்டு குடித்தன வாழ்க்கை.மகனுக்கு தொல்லை கொடுக்க வேண்டாம் என்று இந்த செக்யூரிட்டி வேலைக்கு சேர்ந்திருக்கிறார்.பெரும்பாலும் இரவு வேலைதான்.
சமூகம்,அந்தஸ்து,வசதி என்ற பெயரில் நாம் செய்யும் அத்தனை கோமாளித்தனத்தையும் ஆச்சர்யமாக பார்ப்பார். "ஏன் சார்,எல்லா வீடும் எப்பவும் பூட்டியே தான் இருக்கு,அப்புறம் எதுக்கு வாசல்ல நாலு செக்யூரிட்டி?","எந்த அப்பார்ட்மெண்ட் லையும் துக்க வீட்டிற்கான அறிகுரிய பார்த்தது கிடையாது.அப்பார்ட்மெண்ட்ல துக்க சம்பவம் நிகழாதா ,இல்ல சாக போறவங்கள அபார்ட்மெண்ட்ல சேர்த்துக்க மாட்டிங்களா?","மனுஷ பய வாழ்க்கைல நாளைக்கு என்ன நடக்கும்னே தெரியாது,அப்புறம் எந்த நம்பிக்கைல இருபது வருசத்துக்கு கடன் வாங்குறீங்க?". இப்படி அவர் கேட்க்கும் எந்த கேள்விக்கும் என்னிடம் பதில் இருக்காது.சும்மா சிரித்து வைப்பேன்.
இரண்டு நாட்களாக பேப்பர் வாங்க முத்தையா வரவில்லை.வேலை பளுவில் நானும் கவனிக்க வில்லை.வார இறுதியில் விசாரிக்கும் போது தான் தெரிந்தது ,அவரை வேலை விட்டு அனுப்பி விட்டார்கள் என்று.விஷயம் இதுதான்.சென்ற வாரம் ,பெரு மழை பெய்ந்து ஓய்ந்து இருந்த ஒரு நாளில்,இரவு பணியில் இருந்த முத்தையா,சேரில் இருந்த படியே சிறிது கண் அயர்ந்து இருக்கிறார்.தனது ஊருக்கு போய்விட்டு அதிகாலை நாலு மணிக்கு அபார்ட்மெண்ட் வந்த எதோ ஒரு புண்ணியவான் ,தூங்கி கொண்டு இருக்கும் இவரை போட்டோ எடுத்து வாட்ஸுப்-இல் அனுப்பி விட்டார்.அதன் பிறகு,"செக்யூரிட்டி இப்படி தூங்கினால் நமக்கு என்ன பாதுகாப்பு?","இதற்கா மாசா மாசம் சம்பளம் கொடுக்கோம்?" என்று ஏகப்பட்ட அலப்பறை.இவ்வளவிற்கும் அவர் கதவை தட்டிய உடனையே இவர் எழுந்து விட்டிருக்கார்.இருந்தாலும் வேலையை விட்டு அனுப்பி விட்டார்கள். கேட்பதற்க்கே அதிர்ச்சியாக இருந்தது.தனது தந்தை வயதில் இருக்கும் ஒருவரை காவலுக்கு வைத்து விட்டு நாம் உள்ளே தூங்குவதே பாவம்.இதில் வேலையை விட்டு அனுப்பினால் என்ன செய்வார் என்று கூட யோசிக்காமல் அனுப்பி விட்டார்கள்.இவ்வளவிற்கும் அபார்ட்மெண்டில் வசிக்கும் முக்கால் வாசி பேர் கடன் காரங்கதான்,அப்புறம் எதற்கு இந்த பந்தா என்று தான் புரியவில்லை.
முத்தையா இல்லாத அபார்ட்மெண்ட் வாழ்க்கை வெறுமையாக இருந்தது.பொருள் ஈட்டும் பொருட்டு பெரு நகரத்தில் இயல்பான வாழ்க்கையை தொலைத்த என்னை போன்றவர்களுக்கு "முத்தையாக்களின்" தேவை இருந்து கொண்டே தான் இருக்கிறது.இன்று பேப்பர் போடும் சிறுவனை அழைத்து நாளில் இருந்து பேப்பர் வேண்டாம் என்று சொல்லி விட்டேன். - தரன்
அருமை நண்பா... இன்னும் இது போல் உணர்வு பூர்வமான எழுது.. வாழ்த்துக்கள்
ReplyDelete